புதுச்சேரி: போக்சோ வழக்கில் தனியார் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் இன்று (மே 20) தீர்ப்பளித்தது.
புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப் பகுதியான கடலூர் கீழ்ப்பாதியைச்சேர்ந்தவர் பாபு (29). தனியார் பேருந்து நடத்துநர். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 2023-ம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
பாபு மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு சார்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஷோபனா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.