மதுரை: மதுரையில் வீட்டு கான்கிரீட் கூரை இடிந்து கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள சப்பானி கோயில் தெருவில் வசித்தவர் பாலசுப்பிரமணியன் (45 ). கூலித் தொழிலாளி. திருமணம் ஆன இவர் மனைவி, குழந்தைகளை பிரிந்து வசித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் தூங்கி உள்ளார். திடீரென நள்ளிரவில் அவரது வீட்டு சிமென்ட் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடுபாடில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடு மிகவும் பழமையான வீடு என்பதால் நேற்று பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலசுப்பிரமணி உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.