சென்னை: ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் 3 பேர் போலீஸில் சரணடைந்தனர். மேலும், ரவுடி உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (27). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும் நந்தனம் சிஜடி நகரைச் சேர்ந்த ரவுடி ராஜ்கிரணின் மனைவி பிரியா (23) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, ராஜ்கிரணை பிரிந்து கடந்த ஓராண்டாக கவுதமுடம் பிரியா வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தங்களுக்கு ராஜ் கிரண் இடையூறாக இருப்பதாகக் கருதி கடந்த செப்டம்பர் மாதம் கவுதமும், பிரியாவும் சேர்ந்து கொரட்டூரில் ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் ராஜ்கிரண் உயிர் தப்பி, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கவுதம், பிரியா இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த கவுதம் மற்றும் பிரியா நந்தனத்தில் வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கவுதமை பழி வாங்குவதற்காக ராஜ்கிரண் அவரை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார். மேலும், பிரியாவின் அண்ணன் கண்ணகி நகரைச் சேர்ந்த சுகுமாருடன் சேர்ந்து கவுதமை கொலை செய்ய அவர் திட்டமிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கவுதம் வீட்டுக்கு வந்த ராஜ்கிரண், சுகுமார் மற்றும் கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர், கவுதமை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார், கவுதம் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், தப்பியோடிய ராஜ்கிரண், சுகுமார், மணி, பிரதீப், சுரேஷ், ராஜா பாய் 6 பேரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் கவுதமை கொலை செய்த வழக்கில் துரைப்பாக்கத்தை சேர்ந்த பிரதீப்(25), சுரேஷ்(27), ராஜா பாய்(28) ஆகியோர் சைதாப்பேட்டை போலீஸில் சரணடைந்தனர். தப்பியோடிய ராஜ்கிரண், சுகுமார், மணி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.