திருப்பூர்: திருப்பூரில் பிஹார் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் நிறுவனத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் நிறுவனத்தின் அருகிலேயே உள்ள குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு, பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார் (22) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து ஆகாஷ்குமார் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து, செல்போனைப் பறிக்க முயன்றனர். ஆகாஷ்குமார் செல்போனைத் தர மறுத்ததால், அந்த 3 பேரும் அவரை கத்தியால் குத்திவிட்டு, செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
சக தொழிலாளர்கள் ஆகாஷ்குமாரை மீட்டு, திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆகாஷ்குமாரைகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் உள்ளே வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார், விரைவில் குற்றவாளிகள்கைது செய்யப்படுவார்கள் என்றுஉறுதி அளித்தனர். இதையடுத்து,தொழிலாளர்கள் போராட்டத்தைக்கைவிட்டனர். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட ஆகாஷ்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் கூறும்போது, “பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார், சீத்தாமாரி மாவட்டம் சோன்பார்ஷாவை சேர்ந்தவர். 7-ம் வகுப்பு படித்துள்ள இவர், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். அவரைக் கொலை செய்த 3 மர்ம நபர்களை விரைவில் கைது செய்வோம்” என்றனர்.