சென்னை: மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியர் பயணம் செய்த ஆட்டோவில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, மடிப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில், போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் பயணித்த இளைஞர் வைத்திருந்த பையில் 7 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.5 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
விசாரணையில், அந்த இளைஞர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் (29) என்பதும், பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்க நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்குமார் யாதவ் (21) என்பவர் சென்ட்ரலில் ரயிலில் வந்தபோது அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.