பெண் போலீஸாரிடம் பெண் உயர் அதிகாரி பேசுவதுபோல் மிமிக்ரி செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் பிரிவில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பெண் குரலில் மிமிக்ரி செய்து பெண் காவலரின் குரல் மற்றும் உடல் அங்கங்களைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்துள்ளார். மேலும், ஒரு ஆண் நபரை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். அனுசரணையாக நடந்து கொண்டால் காவல் துறையில் எஸ்ஐ பணி கிடைக்க உதவுவதாகவும், புதிய வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி பேசியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர், அழைப்பைத் துண்டித்தார். மேலும், இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பெண் காவலரிடம் பல குரலில் (மிமிக்ரி) பேசி தொடர்பு கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெரியசாமி (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதாக திருப்பூர், தருமபுரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது. இதையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.