சென்னை: மூடப்பட்ட சாலை வழியாக தடையை மீறி சென்றதை கண்டித்த மெட்ரோ ரயில் பணி ஊழியரை, பாடகர் வேல்முருகன் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிராமிய பாடல்களை பாடி புகழ் பெற்றவர் வேல்முருகன். பின்னர், தமிழ் திரைப்படங்களிலும் பாட ஆரம்பித்து பெயர் பெற்றார்.
இவர், மதுரவாயல், கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக நேற்று முன்தினம் சென்றுள்ளார். அதே பகுதி வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் சந்திப்பு அருகே சென்றபோது அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு போடப்பட்டு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்துள்ளது.
பேரிகார்டை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல வேல்முருகன் முயன்றாராம். அப்போது, அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் துணை மேலாளர் வடிவேலு என்பவர் பாடகர் வேல்முருகனின் செயலை கண்டித்துள்ளார். மேலும், இவ்வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது என கண்டிப்புடன் கூறினாராம்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய் தகராறாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த வேல்முருகன், வடிவேலை தாக்கி விட்டு, தடையை மீறி அந்த வழியாக காரில் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த வடிவேலு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், இது குறித்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.