தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் ஒருவர், பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர் பாக, விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர் ஒருவர், அங்குள்ள பெண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர், சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர்.
இதையடுத்து, உரிய விசா ரணை நடத்துமாறு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனுக்கு, சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
அதன்படி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமையிலான விசாகா கமிட்டியினர், குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர், தொடர்புடைய துறை மாணவ,மாணவிகளிடம் நேற்று முன்தினம் 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தியதாகக் கூறப் படுகிறது.
இதுகுறித்து பயிற்சி மருத்து வர்கள் சிலர் கூறும்போது, "மருத் துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தால், படிப்பு, செய்முறை தேர்வு போன்றவற்றில் சிக்கல் வந்துவிடும் என்று கருதி, சிலர் பிரச்சினைகளை வெளியில் சொல்வதில்லை. பாலியல் தொல்லை அளிப்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இங்குள்ள விசாகாகமிட்டியும் பெயரளவுக்குத்தான் உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியரைக் காப்பாற்றவே பலரும் முயன்று வருகின்றனர். எனவேதான், சமூக வலைதளங் களில் இதுகுறித்த தகவலை வெளியிட்டோம். இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும்" என்றனர்.