க்ரைம்

காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரண வழக்கில் 7 நாளாகியும் துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரண வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கடந்த 4-ம் தேதி தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் சடலம் மீட்கப்பட்டது. சந்தேக மரணம் என்று உவரி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் தலைமையிலான 8 தனிப்படை போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். எனினும், கடந்த 7 நாட்களாக எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

கொலையா, தற்கொலையா? பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரும், ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதைக்கூட போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடமும், ஜெயக்குமாரின் மகன்கள் உள்ளிட்ட உறவினர்களிடமும் பலகட்டமாக விசாரணை நடத்திப்பட்டது.

கடந்த 2-ம் தேதி உவரி அருகேஉள்ள குட்டம் பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன் சுவிட்ச்ஆஃப் ஆகியுள்ளது தெரியவந்ததால், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகேமரா காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கிணற்றில் கிடைத்த கத்தி: மேலும், ஜெயக்குமாரின் வீட்டின் அருகே 2 லிட்டர் பெட்ரோல் பாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பாட்டிலில் பதிவாகியுள்ள கை ரேகைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கடந்த 2-ம் தேதி இரவு யாராவது பாட்டிலில் பெட்ரோல் வாங்கிச் சென்றார்களா என்று தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

ஜெயக்குமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து ராட்சதமோட்டார்கள் மூலம் தண்ணீரைவெளியேற்றும் பணி நிறைவடைந்த நிலையில், கிணற்றிலிருந்து ஒரு சிறிய, துருப்பிடித்த கத்தி மட்டும் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேற்று மாலை வரையில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT