கிருஷ்ணகிரி: சென்னையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியை கடத்திக் கொலை செய்து புதைத்த விவகாரத்தில், ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் மேற்கு ஜெஸ்வந்த் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும், தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சந்தோஷ், சந்திரகுமார் என இரு மகன்களும் உள்ளனர். கடந்த 5-ம் தேதி மகன் சந்திரகுமார் நீட் தேர்வு எழுதுவதற்காக காரில் அழைத்துக் கொண்டு, மனைவியுடன் பூந்தண்டலம் தனியார் கல்லூரிக்குச் சென்றார். மகனை கல்லூரியில் இறக்கிவிட்டு விட்டு, பொள்ளாச்சியில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்ய செல்வதாகக் கூறி சென்றவர்கள் மாயமானார்கள்.
மாயமானதாக புகார்...: நீண்ட நேரமாக தந்தையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மகன் சந்தோஷ், சென்னை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், தங்களுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கணேசன், பொள்ளாச்சி ஆணைமலையை சேர்ந்த நித்யானந்தம் ஆகியோருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. எனவே அவர்கள் பணத்துக்காக தனது தாய், தந்தையரை கடத்தி சென்று அடைத்து வைத்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீஸார், வழக்குப் பதிவு செய்து காணாமல் போன வெங்கடேசன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை தேடி வந்தனர். மேலும், மாயமான தம்பதியை கண்டறிய அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், ஊத்தங்கரை அருகே உள்ள சுண்ணலம்பட்டியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த கணேசன், நித்யானந்தம் மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேசனையும், அவரது மனைவி லட்சுமியையும், கடந்த 5-ம் தேதி மாலை கடத்தி வந்து கணேசனின் தோட்ட வீட்டில் தனித் தனி அறைகளில் அடைத்து வைத்ததும், அங்கு கட்டையாலும், கையாலும் கடுமையாக தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமியை மட்டும் அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு, வெங்கடேசனின் உடலை திப்பம்பட்டியில் உள்ள குமரேசன் என்பவரது கிரஷர் அருகில் உள்ள தைல மரம் அருகில் பள்ளம் தோண்டி புதைத்தது தெரிந்தது. இதனையடுத்து கணேசன், நித்யானந்தம் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரையும் குன்றத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு...: தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் உயிரிழந்த வெங்கடேசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்திலேயே அரசு மருத்துவர் பிரவீணா கோமதி தலைமையிலான குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். இந்நிகழவின் போது, வட்டாட்சியர் திருமால், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், குன்றத்தூர் வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி...: கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியதாவது: “சுண்ணாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் கணேசன் (50). இவர் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று, தனது உறவினரான வெங்கடேசன் (52) என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்பணத்தை திருப்பி கேட்கும் போது கொடுக்காமல் கணேசனை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் பொள்ளாச்சியை சேர்ந்த நித்யானந்தம் மற்றும் விக்னேஷ் என்பவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வெங்கடேசன் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. வெங்கடேசன் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் வெங்டேசனை, கணேசன், நித்யானந்தம், விக்னேஷ் ஆகியோர் கடத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது." என போலிஸார் கூறினர்.