கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் துறையினரால் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, தேனியில் சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் கஞ்சா இருந்தது தொடர்பாக, பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் சவுக்கு சங்கர் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை கடந்த 6-ம் தேனி காவல் துறையினர், கோவை சிறையில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் பின்னர், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர், தாங்கள் பதிந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் வைத்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையினர், சவுக்கு சங்கர் மீது தாங்கள் பதிந்த 2 வழக்குகள் தொடர்பாக இன்று (மே 9) அவரை கைது செய்தனர்.
சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்திருந்தனர். அதேபோல், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர்.
இந்த இரு வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக சென்னை காவல் துறையினர் இன்று கோவை மத்திய சிறைக்கு வந்திருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை தங்களது இரு வழக்குகளிலும் கைது செய்து, அதற்கான ஆவணங்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரிடம் வழங்கினர். இதுவரை மொத்தம் 5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முழு விவரம்: சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு சிறைத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு