சென்னை: உணவு கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம், மகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (76).
கணவர் மற்றும்மகளை இழந்த நிலையில் சொந்தவீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டுக்கு 2 பேர் வந்து, ‘பசியாக இருக்கிறது. ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள்’ என கேட்டுள்ளனர்.
பத்மாவதி, சமையல் அறை சென்று பார்த்துவிட்டு, உணவு இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி, ‘உணவு இல்லை என்றால் என்ன, காதில் அணிந்திருக்கும் கம்மலை கொடு’ என மிரட்டி 2 கம்மல்களையும் பிடுங்கிச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த பத்மாவதி, இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.