சிவகாசி: சிவகாசியில் தனியார் பேருந்து ஓட்டுநர் சுரேஷ் (38) கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற போது கட்டிடத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற டோனி(எ) பால கணேஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சுரேஷ்(36). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிவகாசி அருகே சுப்ரமணியபுரம் காலனி பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிவகாசி கிழக்கு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் நாரணாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் பதுங்கி இருந்த டோனி (எ)பால கணேஷ்(28), நந்தகுமார்(26), கார்த்தீஸ்வரன்(21), பழனி(28) ஆகியோரை கைது செய்தனர்.
அப்போது போலீஸாரை கண்டதும் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்து தப்ப முயன்ற டோனி (எ) கணேஷ்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி மட்டும் போலீஸாரை எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, டி.எஸ்.பி சுப்பையா ஆகியோர் பாராட்டினர்.