க்ரைம்

மதுரையில் உலா வரும் புது மோசடி - காலி மனைகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் காலி மனைகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து, பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதூர் அருகே சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சந்திரபோஸ். இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியில் கடந்த 1988-ம் ஆண்டு சொசைட்டி பிளாட் என வகைப்படுத்தி, வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கு வீட்டுமனைகள் வாங்கிய சிலர், தற்போது வெளியிடங்களில் வசிக்கின்றனர். இதனால் அந்த இடங்கள் காலியாகவே உள்ளன.

இந்நிலையில், மோசடி கும்பல் ஒன்று, கவனிப்பாரற்றுக் கிடக்கும் வீட்டுமனைகள் யார் பெயர்களில் உள்ளது என்பதை அறிந்து, அதற்கான போலி ஆவணங்களை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து விற்கின்றனர். இதன்படி, ஒரு வீட்டுமனை ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இக்குற்றச்செயலுக்கு மதுரை குலமங்கலம் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தினரை அக்கும்பல் பயன்படுத்தியுள்ளது. ஒரே பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வெவ்வெறு பெயர்களில் போலி ஆவணம் தயாரித்து விற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை அறியாமல் வாங்கியவர்கள், ஒரே இடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சொந்தம் கொண்டாடும் சூழல் உள்ளது. மேலும், வீட்டுமனைகளின் உண்மையான உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இக்கும்பல் சூர்யா நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற இடங்களிலும் மோசடியை செய்ய துணிந்துள்ளது. இம்மோசடி கும்பல் மீதும், ஆதார், பான் கார்டு, இறப்பு, வாரிசு, பத்திரம் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் வீட்டு மனைகளை மீட்டுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT