ஆவடி: ஆவடி அருகே மிட்னமல்லியில் சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று போலீஸார் வடமாநில இளைஞரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மிட்னமல்லி, காந்திரோடு 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவன் நாயர்(68).
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்தார். சிவன் நாயரின் மனைவி பிரசன்னாதேவி(63), மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மகன் ஹரிஓம் ஸ்ரீ, திருமுல்லைவாயல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருவதோடு, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை ஹரிஓம் ஸ்ரீ வீட்டில்இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது, சிவன் நாயர், பிரசன்னாதேவி இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இரவு 8.30 மணிக்கு மேல் பெண் ஒருவர்சிவன் நாயர் வீட்டுக்கு வந்த போது,தம்பதி கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஹரிஓம் ஸ்ரீ, வீட்டுக்கு விரைந்து வந்து பெற்றோர் உடல்களை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து,தகவலறிந்த ஆவடி காவல் துணைஆணையர் ஐமான் ஜமால், உதவி காவல் ஆணையர் அன்பழகன், இரவு ரோந்து பணியில் இருந்த செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீஸார், தம்பதி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு, வழக்குப் பதிவு செய்தமுத்தாபுதுப்பேட்டை போலீஸார்,அப்பகுதியில் உள்ள கண்காணிப்புகேமரா காட்சிகள் மற்றும் இரட்டைக் கொலை நடந்த வீட்டில்கிடைத்த தடயங்கள் உள்ளிட்ட வையின் அடிப்படையில், சிவன் நாயர்- பிரசன்னாதேவி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்(20) என்ற இளைஞரை நேற்று கைது செய்தனர்.
கைதான மகேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: மகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு முத்தாபுதுப்பேட்டையில் இருந்த ஹார்டுவேர்ஸ் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போது, அவர் சிவன்நாயரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் சிவன் நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரது வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளார்.
இதனை சிவன் நாயரின் மனைவி பிரசன்னா தேவி கண்டித்துள்ளார். இதுபற்றி தன் மகனிடமும் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் சிவன் நாயரும், அவருடைய மனைவியும் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்டு மகேஷ், சிவன் நாயரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இதனால், பிரசன்னா தேவிக்கும், மகேஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகேஷ் பிரசன்னா தேவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த சிவன் நாயரையும் மகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவ்வாறு ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.