சென்னை: பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம்கார்டுகளை பயன்படுத்தி, நூதன முறையில் அவர்களின் பணத்தை திருடி வந்ததாக ஆந்திர பொறியாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்: சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி இவரது ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக ரூ.11,870 எடுக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், கார்த்திக் வேந்தனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் பணத் திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி (27) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 1 லேப்டாப், 1 செல்போன், 2 ஸ்வைபிங் இயந்திரம், 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆந்திராவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு அங்குள்ள வங்கி ஒன்றில்தற்காலிக ஊழியராக பணியாற்றியுள்ளார்.
அப்போது, வங்கி ஏடிஎம் கார்டுகளை தவறான வழியில் பயன்படுத்தி வாடிக்கை யாளர்களுக்கே தெரியாமல் பணத்தை எடுப்பது எப்படி எனநண்பர்களுடன் சேர்ந்து நுணுக்கங் களை சட்டவிரோதமாக கற்றுக் கொண்டு வங்கி பணியிலிருந்து வெளியேறி உள்ளார்.
அதன் பின்னர், தனது நண்பருடன் சென்னை வந்த அவர், கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு சென்று பொதுமக்கள் மறதியாக தவறவிட்டுச் செல்லும் ஏடிஎம் கார்டுகளை திருடி, பணத்தை ஸ்வைபிங் இயந்திரத்தை பயன்படுத்தி வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கும், ஆன்லைன் ரம்மி கணக்குக்கும் பணப் பரிமாற்றம் செய்து நூதன முறையில் பண மோசடி செய்துள்ளார்.
அந்த பணம் மூலம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளார். இவர் சென்னை மட்டும் அல்லாமல் திருப்பதி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உட்பட மேலும் பல இடங்களிலும் இதேபோல் கைவரிசைகாண்பித்துள்ளார். ஹைதராபாத்தில் மட்டும் தல்லா ஸ்ரீனிவாசலு ரெட்டி மீது 11 வழக்குகள் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.