தூத்துக்குடி: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாகக் கூறி கோவில்பட்டி இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக, சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்து மதத்தில் இருந்து விலகி,கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவர்கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும், வருமான வரி செலுத்தவேண்டும் என்று கூறி, அதற்காக பணம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய கோவில்பட்டி இளைஞர், அந்த நபருக்கு ரூ.4,88,159-ஐ ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் அந்தநபரை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளைஞர்,தேசிய சைபர் குற்றப் பிரிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், மோசடியில் ஈடு பட்டது தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை ஆனந்தம் நகரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜவேலைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.