க்ரைம்

வண்டலூர் அருகே ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பைக்கில் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்திப்பிரிவு

கொளப்பாக்கம்: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் 12-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் முத்துப்பாண்டி (62) அமமுக கட்சி நிர்வாகியான இவர் கொளப்பாக்கம் பஜனை கோவில் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

முத்துப்பாண்டியனும் அவரது மனைவி மேரியும் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் ஓட்டல் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், திடீரென நாட்டு வெடிகுண்டை ஓட்டலுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

வெடிகுண்டு ஓட்டலில் முன் பகுதியில் விழுந்து வெடித்தது. அதனால் ஏற்பட்ட தீயால் ஓட்டல் விளம்பரபேனர் சேதமடைந்தது. திடீரென எழுந்தவெடிகுண்டு சத்தம் அருகிலிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் அறிந்து வந்த கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மர்ம நபர்கள் வீசிய நாட்டு வெடிகுண்டின் மூலப்பொருட்கள் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

நாட்டு வெடிகுண்டு வீச முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT