சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவினர், நண்பர்கள் குரலில் பேசிமோசடி செய்வோரிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் மூலம் அவரது குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்துக் கொள்கிறது. பின்பு அந்த குரல் மாதிரியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் குளோனிங் செய்து, அவருக்கு தெரிந்த நபரை (உறவினர் அல்லது நண்பர்) அழைத்து பேசுகின்றனர்.
உடனடி உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறி, அழுது கொண்டோ அல்லது கெஞ்சும் தொனியிலோ பேசுகின்றனர். இதனால் மறுமுனையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. தொடர்ந்து, யுபிஐ போன்ற முறைகளைப் பயன்படுத்தி உடனடியாக பணத்தை அனுப்புமாறு மோசடி செய்பவர் கேட்கிறார்.
உதவி கேட்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் இவரும் பணத்தை அனுப்பி வைக்கிறார். பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் பணம் கேட்ட தங்கள் குடும்பஉறுப்பினர் அல்லது நண்பரின் எண்ணைத் தொடர்பு கொள்ளமுயலும்போது தான் ஏமாற்றப்பட்டதை உணருகிறார்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளஅழைக்கும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்க வேண்டும். அதற்கு அழைப்பு வந்த புதிய எண்ணை விடுத்து, தன்னிடம் ஏற்கெனவே இருக்கும் தொலைபேசி எண்ணில் அழைத்து உதவி கேட்டது அவர் தானா என்பதை சரிபார்க்க வேண்டும். குரல் குளோனிங் மோசடி உட்பட பொதுவான மோசடிகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக தெரியாத எண்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்க்ரைம் பிரிவின் ‘1930’ என்னும் கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.