மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 2012-ல் காரில் சாராயம் கடத்திச் சென்றவர்களை, நடமாடும் சோதனைச் சாவடி பிரிவைச்சேர்ந்த போலீஸார், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றதலைமைக் காவலர் ரவிச்சந்திரன்(45), கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் கடத்தல்காரர்கள் சென்ற காரை மறித்துள்ளார். அப்போது காரை ஓட்டிய அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர், ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன், சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக மீன்சுருட்டிகலைச்செல்வன், சங்கர்(44), ராமமூர்த்தி(64), புளியம்பேட்டை கருணாகரன்(54) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.
இதில், கலைச்செல்வனுக்கு பதிலாக சுவாமிமலை இன்னம்பூரைச் சேர்ந்த செல்வம்(32) என்பவரும், கருணாகரனுக்கு பதிலாக வெண்ணங்குழியைச் சேர்ந்த செல்வக்குமார்(40) என்பவரும் ஆள்மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்குவிசாரணை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கலைச்செல்வன், சங்கர்,ராமமூர்த்தி, கருணாகரன் ஆகிய 4பேருக்கு ஆயுள் சிறை தண்டனைமற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், செல்வம், செல்வக்குமார் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதம்விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.