க்ரைம்

மனநலம் பாதித்த இளைஞரை தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது வழக்குப் பதிவு @ மேட்டூர்

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மனநலம் பாதித்த இளைஞரை கைகளை கட்டி தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே லக்கம்பட்டி கிராமம் தேங்கல்பள்ளம் பாலம் பகுதியை சேர்ந்தவர் காளியண்ணன் (55). இவர் 4 ஏக்கர் நிலத்தை 10 வருடங்களாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், தோட்டத்தில் உள்ள வீட்டில் சந்துக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 21-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாரப்பன் மகன்கள் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோர் காளியண்ணனிடம் மது கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, குடிசை, இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்துள்ளனர். அப்போது, பாண்டியனை, காளியண்ணன் கத்தியால் தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக, கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மாரப்பன், சேரன், காளியண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் மாரப்பன் மகன் சோழன் (23) கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி சற்று மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரை போலீஸார் கைது செய்யவில்லை.

ஆனால், சோழனை பிடித்துச் சென்று அவருடைய கைகளை பின்னால் வைத்து கட்டி கொளத்தூர் விஏஓ லோகநாதன், காவல்துறையினரின் முன்னிலையில் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. இந்த நிலையில் மனநலம் பாதித்த சோழனை கிராம நிர்வாக அலுவலர் தாக்கியது குறித்து அவரது தாயார் மணி, கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போலீஸார், கொளத்தூர் விஏஓ லோகநாதன் (40) மற்றும் திமுக வார்டு செயலாளர் அன்பழகன் (42) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து மேட்டூர் வட்டாட்சியர் விஜியிடம் கேட்டபோது, “விஏஓ மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT