கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்தநடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், சருகு மான் மற்றும் காட்டு மாடு வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, வேட்டைக்குப் பயன்படுத்திய 2 நாட்டுத்துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், கோடாரி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்த வனத் துறையினர், இதுகுறித்து 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணித் தலைவர் சஜீவன் உட்பட 3 பேரைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வேட்டை தொடர்பாக நடுவட்டம் பகுதியைச் சேர்ந்த பைசல், சாபு ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணைநடத்தினோம். 4 மாதங்களுக்கு முன்பு காபி தோட்டத்தில் நுழைந்த சருகு மானை சுட்டுக் கொன்று, இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். துப்பாக்கித் தோட்டாக்களை சஜீவனின் எஸ்டேட்டில் கணக்கராகப் பணிபுரியும் பரமன் என்ற பரமசிவம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதேபோல, காட்டு மாட்டையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, இறைச்சியை சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பைசல், சாபு ஜேக்கப், பரமசிவம் ஆகியோரைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 3 பேரைத்தேடி வருகிறோம் என்றனர்.