கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் கைதாகி, பிணையில் சிறையில் இருந்த வெளியே வந்த இளைஞர் 6 பேர் கும்பலால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் என்கிற திலீப்குமார்( 26)நேற்று முன்தினம் இரவு, ஈகுவார்பாளையம் அருகே கோங்கல் கிராம பேருந்து நிறுத்தம் அருகே தன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திலீப்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இச்சம்பவத்தில் முகம் முழுவதும் சிதைந்த திலீப்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த பாதிரிவேடு போலீஸார், சம்பவ இடம் விரைந்து, திலீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திலீப்குமார் கொலை தொடர்பாக, , காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்த அஜய்(25) ஞானசேகர் (23), சாரதி (20), சேட்டு என்கிற மோகன்குமார் (20), எடபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20), கோங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஷாருக்கான் (23), எடபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20) ஆகிய 6 பேர் நேற்று பாதிரிவேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: கடந்த மார்ச் 2-ம் தேதி மாநெல்லூர் கிராமத்தில் சக்திவேல் (21) என்ற இளைஞரை கத்தியால் வெட்டிகொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களில் ஒருவரான திலீப்குமார், இம்மாத தொடக்கத்தில் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், காயலார்மேடு அஜய்க்கு வைத்த குறியில் அவர் தப்பியதால் சக்திவேல் வெட்டப்பட்டார் என கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு பழிக்கு பழி தீர்க்க முடிவு செய்த அஜய், சக்திவேலை வெட்டிய கும்பலில் ஒருவரான திலீப்குமாரை நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன் கொலை செய்துள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அஜய் உள்ளிட்ட 6 பேரை பாதிரிவேடு போலீஸார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.