சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் வடமாநில பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ரயில் நிலையத்தில் தினசரி 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 3.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு நிலைய மேலாளரிடம் இருந்து நேற்று காலை ஒரு தகவல் வந்தது. அதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் நிலையத்தை சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கும் அறை அருகே ஒரு பெண்தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
பொருட்களை வைக்கும் ரேக்கின் கம்பியில் தூக்கிட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம் பெண் இறந்து கிடந்தார். அந்த பெண்ணை சோதித்தபோது, அவர் தொடர்பாக எந்த விவரமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, தற்கொலை செய்த பெண் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், “இந்த பெண் தற்கொலை செய்த இடத்தில் எந்தவித கண்காணிப்பு கேமராவும் இல்லை. அதே நேரத்தில் மற்ற கண்காணிப்பு கேமராக்களில் இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாக வந்ததும், நெடுநேரமாகியும் திரும்பாததும் பதிவாகி உள்ளது.
எனவே, தற்கொலை செய்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. உறவினர் யாராவது வந்த பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்படும்” என்றனர்.