சென்னை: நடனம் சொல்லிக் கொடுப்பதுபோல் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா பவுண்டேஷன் உள்ளது. இங்கு 1995 முதல் 2007-ம் ஆண்டு வரை பரதநாட்டியம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் தற்போது ஆஸ்திரேலியாவில் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் அங்கிருந்தவாறே நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், தனக்கு பரதநாட்டியம் சொல்லித் தந்த முன்னாள் ஆசிரியர் ஜித் கிருஷ்ணா (51) என்பவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோனை பெற்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஜித் கிருஷ்ணா மீது வழக்குப் பதிந்து அவரை நேற்று கைது செய்தார். இந்த ஆசிரியர் மீது மேலும் ஒரு மாணவி இதேபோல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.