சண்டிகர்: பஞ்சாப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி, அதை உண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மான்வி என்ற அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டனர்.
மான்வியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி அனைவரையும் கவலை கொள்ளச் செய்தது. இந்நிலையில், அந்த கேக்கில் அளவுக்கு அதிகமாக செயற்கை இனிப்பூட்டி இருந்ததே சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் விஜய் கூறுகையில், “கேக்கின் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அதிகளவு சேக்கரைன் இருப்பது தெரிந்தது. சேக்கரைன் என்பது ஒருவகை செயற்கை இனிப்பூட்டி. குளிர்பானங்கள், உணவு வகைகளில் சிறிதளவு சாக்கரைன் சேர்ப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அது அளவுக்கு அதிகமாகும்போது ரத்த சர்க்கரை அளவை அது மிதமிஞ்சிய அளவு அதிகரிக்கும். உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.
சிறுமி மான்வி பிறந்தநாளுக்கு வாங்கப்பட்ட சாக்லேட் கேக்கில் அளவுக்கு அதிகமாக ரசாயன இனிப்பூட்டி இருந்துள்ளது. அதை உண்ட மான்விக்கு சிறிது நேரத்திலேயே நா வறட்சி ஏற்பட்டுள்ளது. மயக்க நிலைக்கு சென்ற அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் ’கேக் கானா’ என்ற கேக் கடையின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.