க்ரைம்

பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை: மைத்துனர் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மைத்துனர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா(35) என்கிற மனைவி, தமிழ்குமரன்(15) என்கிற மகன், ஸ்ரீஜா(13) என்கிற மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், கூலி தொழிலாளியான ஜெயபிரகாஷ், தனக்கு சொந்தமான 10 மாடுகளையும் பராமரித்து வந்தார்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவி சியாமளாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அந்த தகராறின் போது சியாமளாவை ஜெயபிரகாஷ் அடித்து துன்புறுத்துவதும் வழக்கம் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறுமுற்றியதன் விளைவாக கணவரிடம் கோபித்துக் கொண்ட சியாமளா, தன் குழந்தைகளுடன் வடமதுரை பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.

இதுதொடர்பாக, சியாமளாவின் சகோதரர் அருள்(34), அவரது நண்பர் முனியாண்டி(36) ஆகியோர் மதுபோதையில், கடந்த 16-ம்தேதி வீட்டில் தனியாக இருந்த ஜெயபிரகாஷிடம் நியாயம் கேட்டனர். அப்போது, ஜெயபிரகாஷின் கூக்குரல் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது ஜெயபிரகாஷ் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துநடத்திய முதல் கட்ட விசாரணையில், அக்காவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால், கோபமடைந்த அருள், தன் நண்பர் முனியாண்டியுடன் சேர்ந்த ஜெயபிரகாஷை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அருள், முனியாண்டி கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT