க்ரைம்

சென்னை | ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை தாக்கி வழிப்பறி: பெண் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பெரம்பூர், லோகோ 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (64). ரயில்வே துறையில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்து 4 ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த 12-ம் தேதி மாதவரத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் பின்புறம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ரத்தினத்துக்கு உதவுவதுபோல் பேச்சுக் கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று,அவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் ரத்தினம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானகாட்சிகளைக் கைப்பற்றி துப்பு துலக்கினர்.

அதன்படி, ரத்தினத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அதற்கு உதவியதாகவும் சென்னை திரு.வி.க.நகர் செல்வகுமார் (56), பெரம்பூர் தேவதாசன் (25), பொன்னேரி ஹரிகிருஷ்ணன் (24), பெரவள்ளூர் ஜெய்  (23) ஆகிய 4 பேரைக்கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT