ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பகலில் பிரகாஷ் கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், கடைக்குள் நுழைந்து இரும்பு கதவை மூடினர்.
தொடர்ந்து, அக்கும்பலில் இருவர் பிரகாஷை, இரு துப்பாக்கிகளின் முனையில் இந்தி மொழியில் பேசி மிரட்டினர். பிறகு அக்கும்பல், பிரகாஷின் வாயை டேப்பால் ஒட்டிவிட்டு, கைகளை கயிற்றால் கட்டி விட்டு, கடையின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புதிய தங்க நகைகள், அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து, மர்ம கும்பல், கடையின் கதவை பூட்டி விட்டு, அப்பகுதியில் தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரில் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி சென்றனர்.
இதையடுத்து, பிரகாஷ் கடையின் கதவை கால்களால் எட்டி உதைத்து, அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அப்போது, பிரகாஷின் உறவினர் ஒருவர் ஓடி வந்து, கடையின் கதவை திறந்து பிரகாஷ் வாயில் ஒட்டப்பட்ட டேப், கைகளில் கட்டப்பட்ட கயிறு ஆகியவற்றை அவிழ்த்து காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை காவல் ஆணையர் ஐமான் ஜமால், பட்டாபிராம் உதவி காவல் ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முத்தாபுதுப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, “நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையரின் உருவங்கள், அவர்கள் வந்த காரின் பதிவு எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தி 8 தனிப்படைகள் மூலம் கொள்ளையரை தீவிரமாக தேடி வருகிறோம்’ என்றனர்.