க்ரைம்

திருவள்ளூர் | ஊராட்சி தலைவர் கணவரின் காதை கடித்தவரின் காது அறுப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் (60). கடந்த மாத தொடக்கத்தில், தண்ணீர்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்பணியை பார்வையிட்ட ஊராட்சி தலைவரின் கணவர் தயாளனிடம், தண்ணீர்குளம்- கணபதி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம் (42), ஆட்டோவை வீட்டிலிருந்து சாலையில் எளிதாக ஏற்றும் வகையில் சாலையை சரிவாக அமைக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு தயாளன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மகாலிங்கம், தயாளன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மகாலிங்கம், தயாளனின் இடதுபுற காதை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தயாளன் சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய செவ்வாப்பேட்டை போலீஸார், மகாலிங்கத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி, பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த மகாலிங்கம், வழக்கம் போல் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாலை தயாளனின் குடும்பத்தினர், பழிக்கு பழியாக மகாலிங்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதோடு, மகாலிங்கத்தின் தலை, கைகளில் அரிவாளால் காயம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், வலது காதை கத்தியால் அறுத்து துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மகாலிங்கத்தின் மீதான தாக்குதலை தடுக்க வந்த அவருடைய மனைவி அம்மு, மகாலிங்கத்தின் தந்தை மாரி, உறவினர் பாபு ஆகியோர் மீதும் தயாளன் குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மகாலிங்கம், அம்மு, மாரி, பாபு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT