ஆனைமலை: ஆனைமலையில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த ஜெப நிகழ்ச்சியில் உணவு அருந்திய பெண் உயிரிழந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை பேரூராட்சி தெற்கு தெருவில் பெந்தகொஸ்தே திருச்சபை செயல்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சபையில் நடந்த ஜெப வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு முடிந்த பின்னர் மதியம் 2.30 மணி அளவில் அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களில் 9 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட ஆனை மலை குமரன் குட்டை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மனைவி சிவகாமி ( 70 ) மாலை 6 மணியளவில் வீட்டிலேயே உயிரிழந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை, அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.