திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி, பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரம் ஊராட்சி தலைவருமான பிபிஜிடி.சங்கர், மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலரும், ரவுடியுமான சாந்தகுமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா உள்ளிட்ட 22 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்; கைது செய்யப்பட்டனர். இதில், 10-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்துவந்தனர்.
அவ்வாறு கைதானவர்களில் ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, மப்பேடு சஞ்சீவி, கடம்பத்தூர் சரத்குமார், கச்சிப்பட்டு சாந்தகுமார் ஆகிய 6 பேரின் குண்டர் தடுப்பு சட்ட சிறைக்காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த வாரம் நிபந்தனை பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் மற்றும் மற்றொரு ரவுடியான சென்னை செல்வம் என 7 பேர் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே புட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்தும் சம்பவ இடம் விரைந்த போலீஸார், அங்கு துப்பாக்கியுடன் இருந்த சாந்தகுமார், ஜெகன், சூர்யா, சஞ்சீவி, சரத்குமார், மற்றொரு சாந்தகுமார் மற்றும் செல்வம் ஆகிய 7 பேரைக் கைது செய்து, விசாரணைக்காக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன், இரவு பணியின் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டதால், பூந்தமல்லி காவல் உதவி ஆணையரின் அனுமதியுடன் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். இதையடுத்து, செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியைக் கூடுதல் பொறுப்பாக மேற்கொண்ட நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன், ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமார் உள்ளிட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், போலீஸார் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின் போது சாந்தகுமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த சாந்தகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் சாந்தகுமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக போலீஸார், சாந்தகுமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சாந்தகுமாருடன் கைதான ஜெகன் உள்ளிட்ட 6 பேர் மீது ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களை திருவள்ளூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதானவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடைமுறைகளை நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் முறையாகச் செய்யவில்லை என, ஆவடி காவல் ஆணையரகம் தரப்பில் கூறப்படுகிறது.
கைதான உடனேயே மருத்துவ பரிசோதனைக்கு சாந்தகுமாரை உட்படுத்தி இருந்தால், அவருக்கு நோய் இருப்பது தெரியவந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், சாந்தகுமாரின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆகவே, ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.