க்ரைம்

சென்னை | வேலை செய்த கடையிலேயே ரூ.9.50 லட்சம் திருட்டு: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வேலை செய்த கடையிலேயே பணத் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அம்ரித் குமார் ஜெயின் (38). இவர் சிந்தாதிரிப்பேட்டை, சுங்குவார் அக்ரகாரம் தெருவில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 15 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல் கடை பூட்டப்பட்டது.

8-ம் தேதி காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் திருடு போனது. அதிர்ச்சி அடைந்த அம்ரித் குமார் ஜெயின் இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், தொடர் விசாரணையில் அந்த கடையில் பணி செய்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ (24), உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய இருவரும் பணிக்கு வராமல் தலைமறைவானது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இவர்கள் இருவர் உட்பட மேலும் இருவர் சேர்ந்து லாக்கரை உடைத்து பணத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT