க்ரைம்

அருப்புக்கோட்டையில் ஆசிரிய தம்பதியை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் சிறை: விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதி சங்கரபாண்டியன் - ஜோதிமணி. 2022 ஜூலை 18-ம் தேதி இவர்கள் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபரால் கொல்லப்பட்டனர். ஜோதிமணி அணிந்திருந்த 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு் பதிவு செய்து, 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். மேலும், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டி மற்றும்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தொடர் விசாரணையில், அருப்புக்கோட்டை அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கர்(42) என்பவர் ஆசிரிய தம்பதியைக்கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, விருதுநகரில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார், குற்றம் சுமத்தப்பட்ட சங்கருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT