திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலர்கள் கண் முன்னே சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தசம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவானவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயதுடைய மகளுக்கு திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரைக் காதலித்து வருகிறார். இதேபோல, அவரது17 வயது தங்கையும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 30-ம்தேதி அக்கா, தங்கை இருவரும், தங்களது காதலர்களுடன் இடையகோட்டையில் நடந்த கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். நள்ளிரவு ஒரு மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலைப் பகுதிக்கு வந்த இவர்கள், அங்கிருந்து தங்களது ஊருக்குச் செல்ல பேருந்துக் காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியே 3 பைக்குகளில் வந்த இளைஞர்கள் மூவர், அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, பைக்கில் பின்னால் அமர வைத்து, திண்டுக்கல் அருகே தாமரைக் குளத்தில் உள்ள மைலாப்பூர் என்ற குளத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஏற்கெனவே காத்திருந்த ஒருவருடன் சேர்ந்து, காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டினர். பின்னர், காதலர்கள் கண்முன்னே அக்கா, தங்கை இருவரையும் 4 பேரும் சேர்ந்து, விடிய விடிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அதிகாலையில் அந்த 4 பேரும் அங்கிருந்து பைக்குகளில் தப்பிவிட்டனர். இதனிடையே, தனது மகள்களைக் காணவில்லை என அப்பெண்களின் தாயார், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மார்ச் 31-ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்கள், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், பாலியல் பலாத்காரம் செய்ததை அவர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண் குமார் ( 21 ), முத்தழகு பட்டியைச் சேர்ந்த வினோத் குமார் ( 26 ) மற்றும் திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ் ( 22 ) ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கடும் தண்டனை...: மேலும், தலைமறைவாக உள்ள சுள்ளான் என்ற பிரசன்னகுமார் ( 25 ) என்பவரைப் பிடிக்க3 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவர் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 5 நாட்களுக்குப் பிறகே போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர் என்று புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இந்த கொடூரச் செயல்களைப் புரிந்த ரவுடிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர்.