சென்னை: அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் அருகே போலி நம்பர் பிளேட்டுடன் நின்ற வாகனத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை போக்குவரத்து போலீஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வாகனத்தில் போலி பதிவெண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போக்குவரத்து போலீஸார் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வாகனம் யாருடையது? எதற்காக போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர்.