படம்: எக்ஸ் 
க்ரைம்

தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல்: முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு @ கரூர்

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மக்களவை அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை ஆதரித்து வாங்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றுள்ளனர்.

அரங்கநாதன்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தப்போது வீடியோ கண்காணிப்புக்குழு அதிகாரியும், தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலருமான வினோத்குமார் அதிமுகவைச் சேர்ந்த ஜெகனிடம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் படியும், வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மறவாபாளையம் பகுதியில் பிரச்சார வாகனத்தின் பின்னால் வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒன்றியச் செயலாளர் மதுசூதனன், ரமேஷ்குமார், கார்த்திக், ஜெகன் ஆகியோர் அலுவலரின் வாகனத்தை மறித்து அவரை ஆபாசமாக, திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முற்பட்டனர். போலீஸார் தடுத்து காப்பாற்றியுள்ளனர். மேலும் வீடியோகிராபர் ஹரிஹரனை வீடியோ எடுக்க விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது வழி மறித்தல், ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT