கோவை: கோவை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள, சக்தி நகரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர்(20). மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவரை, உரிய சிகிச்சை அளித்து அதிலிருந்து மீட்க அவரது தந்தை முடிவு செய்தார்.
இதையடுத்து கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில், கருவலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ‘ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டி அடிக்ஸன் சென்டர்’ என்ற போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அனுமதித்தார். இதன் உரிமையாளராக ஜோசப் என்பவர் உள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச்.29) மதியம் கிஷோர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து தொடர்ச்சியாக சத்தம் போட்டுள்ளார்.
இதனால் அங்கிருந்த வார்டன் கோவை ஆலாந்துறை தேவி நகரைச் சேர்ந்த அரவி்ந்த் ஹரி(28), உளவியல் ஆலோசகர் திருப்பூர் சூசையாபுரத்தைச் சேர்ந்த ஜெப பிரசன்னராஜ்(27) ஆகியோர் கிஷோரின் கை, கால்களை அங்கிருந்த கட்டிலில் டேப்பால் கட்டினர்.
பி்ன்னர், அவரது வாயில் துணியை வைத்து திணி்த்துள்ளனர். இதனால் சிறிது நேரத்தில் கிஷோர் மயக்கமடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த சிகிச்சைக்கு வரும் முன்னரே கிஷோர் உயிரிழந்ததும், வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர். விசாரணையின் இறுதியில், வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் ஆலோசகர் ஜெப பிரசன்ன ராஜ், திருச்சூரைச் சேர்ந்த மேஜூ ஜான், உதகையைச் சேர்ந்த சந்தோஷ், புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை இன்று (மார்ச்.30) கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மேற்கண்ட மையத்தில் 35 பேர் இருந்தனர். அவர்களது பெற்றோர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தங்கியுள்ளவர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.