சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வனப்பகுதியில் இயங்கிய போலி மது ஆலைக்கு ‘சீல்’ வைத்த போலீஸார் அங்கிருந்த 3,500 லிட்டர் எரிசாராயம், 200 மதுபாட்டில்கள், லேபிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் எட்வின் என்பவர் போலி மது விற்பனை செய்வதாக, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு உலகம்பட்டி தனிப்பிரிவு காவலர் கார்த்திக் தகவல் கொடுத் தார்.
அதன் அடிப்படையில் மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.ஐ. தவமணி தலைமையிலான போலீஸார் எட்வினைப் பிடித்து விசாரித்தபோது, சிங்கம்புணரி அருகே குமரத்துக்குடிப்பட்டி அருகேயுள்ள வனப்பகுதியில் போலி மது ஆலை செயல்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆலையில் மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி பிரான்சிஸ் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கேன்களில் 3,500 லிட்டர் எரி சாராயம், 200 போலிமதுபாட்டில்கள், பிரபல மது நிறுவனங்களின் லேபிள்கள், காலி பாட்டில்கள், எசன்ஸ் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதுதொடர்பாக மது ஆலை நடத்தி வந்த பிரான்மலையைச் சேர்ந்த ராமசாமி மனைவி மங்கலம்(45), ரமேஷ்குமார், கரிசல்பட்டியைச் சேர்ந்த எட்வின், சிங்கம்புணரியைச் சேர்ந்த இளையராஜா, முத்துக்குமார் ஆகிய 5 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மதுக்கூடங்களில் விற்பனை: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘குமரத்துக்குடிப்பட்டியில் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தியாகராஜன் என்பவருக்குச் சொந்தமான இடத்தை மங்கலம்வாடகைக்கு எடுத்து போலி மது ஆலை நடத்தி வந்துள்ளார். அங்கு பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மதுபாட்டில்களைத் தயாரித்து மதுக்கூடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று கூறினர்.