சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஒருதொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சிறுவன், ‘‘கோடம்பாக்கம் வாசுதேவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துசிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’’ என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டான்.
இதையடுத்து, போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றபோது, அதுகடந்த 3 ஆண்டுகளாக செயல்படாத பள்ளி என்று தெரியவந்தது. வேண்டுமென்றே புரளி கிளப்பும் வகையில் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரிந்தது.
இதையடுத்து, அழைப்பு வந்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், 3 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் பள்ளியை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.