சென்னை: சம்பளப் பணத்தை கேட்டதால் கொலை செய்தோம் என பிஹார் இளைஞர் கொலை வழக்கில் கைதான அவரது உறவினர்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஈஞ்சம்பாக்கம், கடற்கரையில் உள்ள புதர் அருகே கடந்த 26-ம்தேதி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து நீலாங்கரை போலீஸார் சம்பவ இடம்விரைந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில் கொலையுண்ட நபர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர தாஸ் (33) என்பதும், இவர் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரைக் கொலை செய்ததாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த திருலோகி குமார் (24), அதே மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் குமார் (28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மது அருந்தும்போது தகராறு: கொலை செய்யப்பட்ட ஜிஜேந்திர தாஸ் தனது உறவினர்களான திருலோகி குமார், ஓம்பிரகாஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். ஜிஜேந்திர தாஸின் சம்பளப் பணத்தை திருலோகி குமார் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி மாலை சம்பவ இடத்தில் 3 பேரும் சேர்ந்து மது அருந்திவிட்டுப் பேசிக்கொண்டிருந்த போது, ஜிதேந்திர தாஸ் தனக்குத் தர வேண்டிய சம்பளப் பணத்தை திருலோகி குமாரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த திருலோகி குமார் மற்றும் ஓம்பிரகாஷ் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து மது பாட்டிலை உடைத்து ஜிஜேந்திர தாஸை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியதாக இருவரும் தங்களிடம் வாக்குமூலம் தந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.