புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்குபின்னர் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஒருவரைத் தேடி கர்நாடகாவில் 12 இடங்கள், தமிழகத்தில் 5 இடங்கள், உத்தரபிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது இந்த வழக்கின் முக்கிய சதிகாரரான முசாமில் ஷரீப் என்பரை என்ஐஏ அதிகாரிகள்கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டிஜிட்டல் கருவிகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.