புதுச்சேரி: புதுச்சேரியில் நில அபகரிப்பு கும்பல் மிரட்டியதால் மளிகைக் கடைக்காரர் தற்கொலை செய்தது தொடர்பாக மனு அளித்தும் வழக்குப் பதிவு செய்யாததால் காவல் நிலையத்தை பொதுநல அமைப்பினருடன் முதல்வர் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுவை உருளையன்பேட்டை தொகுதி கோவிந்த சாலை ஒத்தவாடை வீதியை சேர்ந்த அய்யூப் (58). இவர் கடந்த 7-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் பெரிய மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை வாரிசு இல்லாததால் அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இதை யாரிடமும் சொல்லாமல் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
நில அபகரிப்பு கும்பலின் மிரட்டல் காரணத்தால்தான் இவர் தற்கொலை செய்துகொண்டார் என இவரது குடும்பத்தினர், பெரியகடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு மனு அளித்துள்ளனர். மேலும், பெரிய மார்க்கெட் மளிகை கடை சங்கத்தார் மேற்கண்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு வழக்குப் பதிவு செய்யுமாறு மனு அளித்துள்ளனர். நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து பெரியகடை காவல் நிலையத்தை இன்று காலை முற்றுகையிட்டார். அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, போலீஸார் நில அபகரிப்பு கும்பல் குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வதாக உறுதியளித்தனர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.