சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.3 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன. துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தது.
இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்ததால் சுங்கத் துறை அதிகாரிகள், பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த சென்னையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைத் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்கள் சூட்கேஸ்கள் மற்றும் உள்ளாடைக்குள் ரூ.7 கோடி மதிப்புள்ள 10.3 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது சுற்றுலா விசாவில் தாய்லாந்து செல்ல வந்த சென்னையைச் சேர்ந்த பயணியின் சூட்கேஸை அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.3 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சி கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.