சென்னை: தலைமைக் காவலர் தாக்கியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில்கொலை வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட காவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (39). கால்டாக்ஸி ஓட்டுநரான இவர் கடந்த 21-ம்தேதி இரவு வானகரம் அருகேகாரை நிறுத்திவிட்டு, காருக்குள்ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மதுரவாயல்காவல் நிலைய தலைமைக் காவலர்ரிஸ்வான், காரிலிருந்து வெளியே வரும்படி ராஜ்குமாரிடம் கூறினாராம்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜ்குமாரை ரிஸ்வான் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்த ராஜ்குமார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இறந்த ராஜ்குமாரின் சகோதரர் ஜெயகுமார் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் 174-வது சட்டப் பிரிவின் கீழ் (சந்தேக மரணம்) வழக்கு பதிந்தனர்.
பின்னர், அப்பிரிவு மாற்றப்பட்டு கொலைக் குற்றம் ஆகாத, மரணம்விளைவித்தல் என்ற பிரிவின் (304) கீழ் வழக்கு பதியப்பட்டு, குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமைக் காவலர்ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொலை என்ற சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதியாமல், கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமைக் காவலர் ரிஸ்வானை, மதுரவாயல் போலீஸார் காப்பாற்றி உள்ளதாகவும் அவர்மீது கொலை வழக்கு பதிந்து, சிறையில் அடைக்க வேண்டும், பணியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும் உயிரிழந்த ராஜ்குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ``தலைமைக் காவலர் ரிஸ்வான் மற்றும் கார் ஓட்டுநர் இடையேஏற்பட்ட தகராறில் ராஜ்குமார்இறந்துள்ளார்.
இதில், உள்நோக்கம்இருந்ததாகத் தெரியவில்லை. எனவே,கொலை வழக்கு பதியாமல் கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல்என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம். அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.