பொன்னேரி: சோழவரம் அருகே குறைபிரசவத்தில் பிறந்ததால், ஒரு மாத ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்தது தொடர்பாக தாய் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (25) - சத்யா (22) தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 8 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் தீச்சட்டி எடுக்க சென்றார் ரமேஷ். அப்போது, வீட்டில் இருந்த சத்யா, கழிப்பறைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது தன் குழந்தையை காணவில்லை என கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, உறவினர்கள் குழந்தையை தேடிய போது, அருகில் உள்ள கிணற்றில் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவலறிந்த சோழவரம் போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், சத்யா குழந்தையை மறைத்து எடுத்து கொண்டு கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, சத்யாவிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், “குறை பிரசவத்தில் பிறந்ததோடு, எடை குறைவாகவும் குழந்தை இருந்ததால் வருங்காலத்தில் அக்குழந்தைக்கு ஊனம் ஏற்படுமோ என அஞ்சியதாலும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதாலும், தன்னை விட குழந்தையிடம் ரமேஷ் பாசத்தை காட்ட தொடங்கியதாலும் சத்யா, தன் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது. ஆகவே, சத்யாவை போலீஸார் கைது செய்தனர்.