சென்னை: மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், 13 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய இரண்டு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, இரண்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களை போலீஸார் பின்தொடர்ந்து, காண்காணித்தபோது, அவர்கள், 5 -வது நடைமேடையில் நின்ற மங்களூர் விரைவு ரயிலில் ஏறி அமர்ந்தனர். அங்கு சென்ற ரயில்வே போலீஸார், அவர்கள் கொண்டுவந்த சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பார்த்தனர். அவற்றில், 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன்மதிப்பு ரூ.2.60 லட்சம் ஆகும்.
இதையடுத்து, அவர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த டோலி காதுன்(27), பூஜா குமாரிதாஸ்(30) என்பதும், மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்ததும், சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கோழிகோடுக்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரயில்வே போலீஸார் கைதுசெய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.