பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தவர் மணிகண்டன். ஆணழகன் பட்டம் பெற்ற இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டனுக்கு கவிதா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்து, அவரையும் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது வைஷ்ணவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த மணிகண்டன், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வேறொரு பெண்ணை தனது மனைவி என கூறி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் கவிதா, வைஷ்ணவி இருவரும் தனித் தனியாக புகார் அளித்தனர். இந்நிலையில் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல பெண்களை மணிகண்டன் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.