வங்கதேச எல்லையை சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக சேலையூர் காவல் உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவம் கைது செய்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளரின் முழு விவரங்களையும் கேட்டு அந்நாட்டு ராணுவம் தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு கோரி கடிதம் வழங்கிவிட்டு சென்றவர், அதன்பிறகு பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேச எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக, அந்நாட்டு ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்திய பணத்தை பறிமுதல் செய்த, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து எதற்காக அவர் அங்கு சென்றார் என தமிழக போலீஸும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஜான் செல்வராஜின் முழு விவரங்களையும் கேட்டு தமிழக போலீஸாருக்கு வங்கதேச ராணுவ அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது விவரங்களை சேகரித்து, அனுப்பும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.