க்ரைம்

மதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு: தலைமை காவலர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( 39 ). கால்டாக்ஸி ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம்-மதுரவாயல் பை பாஸ் வானகரம் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு காருக்குள் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வான் காரின் அருகே சென்று வெளியே வரும்படி ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் ரிஸ்வான், ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் கீழே மயங்கி விழுந்த ராஜ்குமாரை கண்டதும், காரில் இருந்த பெண் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜ்குமாரை தாக்கிய போலீஸ்காரரும் அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஆம்புலன்ஸ் மூலமாக ராஜ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் போலீஸில் புகார்: இதையடுத்து, அந்த பெண்ணும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இந்நிலையில் ராஜ்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர், போலீஸுக்கு தகவல் கொடுத்த பெண்ணை தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸ்காரர் ரிஸ்வான் தாக்கிதான்ராஜ்குமார் உயிரிழந்ததாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரிஸ்வானை போலீஸார் கைது செய்தனர். போலீஸுக்கு தகவல் கொடுத்த பெண்ணை தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT